திங்கள், 10 ஆகஸ்ட், 2015

ஓலக்குடிசையில் கசிந்த குரல் (சிறுகதை)

அக்கா வீட்டுக்கு போயிருந்தான் குமார் . அம்மா சொல்லிவிட்ட சேதியை சொல்லிட்டு இரவே திரும்பிடத் தான் திட்டம். அக்கா வீட்டில் தங்குவது குறித்து எந்த யோசனையும் இல்லை. அது கோழி கூடுபோல சின்ன குடிசை. மாமா, அக்கா, அக்கா பொண்ணுங்க ரெண்டு பேரு, மாமா பையன், மாமாவோட அப்பா, அம்மா மொத்தம் ஏழு பேரு அந்த குடிசையில தான் தங்கி இருக்காங்க. எட்டாவதா தானும் அங்க தங்கி அவங்களுக்கு சங்கடத்த கொடுக்க விரும்பல அவன். ஆனா அக்கா அவன விட்டப்பாடில்ல. இருடா தம்பி.. நாளைக்கு மாடறுப்பானுவ.. எடுத்து ஆக்கி தர்றேன். திண்ணுட்டு அம்மாக்கு எடுத்துட்டு போவ. சொல்லி நச்சரிக்க தொடங்கிச்சு. அக்காவோட மாமனாரும் விட்டபாடில்ல. என்னப்பா நீயி... கால்ல சுடுதண்ணி ஊத்துனவன் போல துடிக்கிறியே .... இரு தம்பி நாளைக்கு போவலாம். நல்லா இளங்கறியா போடுவானுவ. ராத்திரிக்கே சொல்லிவச்சா தான் காத்தால கறி கிடைக்கும். பக்கத்து ஊரு காரனுவளுக்கு எப்படித்தான் தெரியுமோ, சல்லுன்னு ஓடியாந்து எல்லா கறியவும் வாங்கிட்டு ஓடிருவானுவ. எங்கூருல அறுக்குற மாடுதான் நல்லாருக்கும் ன்னு சுத்துப்பட்ட ஊருசனமும் பேசும். மொலமொலன்னு கிழவர் கறி பெருமையை பேசிக்கிட்டே இருந்தாரு. 

"சித்ரா....... நா போய் ரெண்டு பங்கு சொல்லிட்டு வந்துடுறேன்." ன்னு வேகமா சொல்லிட்டு எழுந்து நடந்தார். வயசு எழுவது கிட்ட வரும் ன்னு நினைக்கிறேன். நடையில கோணல் மானால் எதுவுமில்ல. அச்சுபிசகாம நேரா நடக்குறாரு. ஆச்சரியமா பாத்துகிட்டே இருந்தான். அவன்கிட்ட வந்து அக்கா உக்காந்திச்சி. சட்டப் பையில மூணு நோட்டு பணத்தை திணிச்சிட்டு காதுல குசுகுசு ன்னு சொல்லிச்சி... "மாமனுக்கு தெரியாம வச்சிக்கோ..."  காலையில மாமன் கொடுத்தா வாணாம் ன்னு சொல்லாத.. வாங்கிக்க..." கிழவி உள்ளருந்து சித்ரான்னு அக்காவ கூப்பிட்டுச்சி. உத்தா உறவுக்குகிட்ட நாலுவார்த்த வடிக்க விடுறாள பாருன்னு முனகிகிட்டே அக்கா எழுந்து போயிடுச்சி....

மணி ராத்திரி எட்டுக்கு மேல ஆயிடுச்சி. அது வெய்ய காலம். நிலாவெளிச்சம் பட்டபகல் மாறி இருக்கு. வின்மீனுங்க வேற கோலப்புள்ளி மாதிரி பக்கத்துக்கு பக்கத்துல மின்னுதுவோ... அவங்கவங்க வீட்டு வாசல்ல பொழுது சாயவே தண்ணி ஊத்தி வச்ச இடத்தில ஆளாளுக்கு பாய போட்டு படுக்க ஆரம்பிச்சிடுங்க சனங்க. எதிர்த்த வீட்டு வாசல்ல, நிலா வெளிச்சத்துல ஒரு குடும்பம் சோறு தின்னுகிட்டு இருக்காங்க. பக்கத்து வீட்டு வாசல்ல கிழவர் ஒருவர் கட்டில் போட்டு உக்காந்து பீடி குடிக்கிராப்ள... தெருவிளக்கு முன்னாடி பொட்ட புள்ளங்க கோ-கோ வெளையாடுதுங்க. அதுக்கு அந்தாண்ட பசங்க கபடி. கொஞ்சம் தள்ளி பெரியாளுங்க சீட்டு விளையாடுறாங்க. பொசாய 6 மணிக்கு சோறு தின்னுட்டு போன புள்ளிவ இன்னும் காணலன்னு கிழவி பேச ஆரம்பிச்சிச்சி. பள்ளிக்கூடம் விட்டு வந்தா புக்க எடுத்து கண்ணால பாக்க மாட்டேங்கிதுவோன்னு ஒரே புலம்பல் ...  பெரியவ, எட்டாவது, சின்னவ 6வது படிக்கிறாளுங்க. பையன் இப்பதான் ரெண்டாவது போறான். கிழவி அதுக்குத் தான் திட்டி கிட்டு இருக்கு. ஆம்பளபய எங்கினாச்சும் கிடப்பான். பொட்ட சிரிக்கிவ எங்க போனாளுவ தெரியலையே. ஆட்டக்காரிச்சி மாறி மை வச்சிகிட்டு திரியாருளவளே. இப்பத்தான் மசுரு மொளைக்காதவன் கூட, பொண்டாட்டி தேடி அலையுறான். வரட்டும் இன்னிக்கு அவளுவ. மேனாமினிக்கியாட்டம் ஆட்டிகிட்டு திரியுற அந்த மசுர அறுத்தா தான் அடங்குவாளுவ. சித்திரா அந்தாண்ட பாரேன்... அவளுவ நிக்கிறாளுவலான்னு. 'வருவாளுவ இர்றேன்' ன்னு அக்கா முறைக்க... நீ கொடுக்குற துணிச்ச தாண்டி ஆடுராளுவ. புள்ள வளக்குறாபாரு புள்ள .. வளப்பங்கெட்டதனமா ன்னு மருமவளையும் சேர்த்து திட்ட ஆரம்பிருச்சி கிழவி.

கூட்டாளிங்க கூட எங்கயோ போயிட்டு குமாரோட மாமா வந்தாரு. எப்ப மாப்ள வந்த ன்னு விசாரிச்சார். அப்பா, அம்மா, ஊரு, படிப்பு பத்தி பொதுவா விசாரிச்சிட்டு, அவங்க அம்மாகிட்ட போனாரு.    

"ஏம்மா கத்திகிட்டு இருக்க?..."

"ச்சீ... எட்டப் போடா மசுறான் மொவன... மூணு புள்ள பெத்த பொறவு இன்னும் என்னாடா கூட்டாளிங்க வேண்டிகிடக்கு?... உன் வழப்பம் தான உன் புள்ளிவளுக்கும் வரும். உங்க வம்சமே வழப்பம்கெட்ட வம்சம் தான "

"இப்ப ஏன்னா ஆயிப்போச்சு... ஏன் கத்திகிட்டு இருக்க"

"ஹ்ம்ம்..... பொசாய போன புள்ளிவள காணோம்ன்னு தேடுறன்... கேக்குறான் பாரு கேளுவி. புள்ள பெத்துப் போட்டா மட்டும் ஆச்சா... எங்க போவுதுவ, எங்க வருதுவன்னு பாக்க வாணாம்... ங்கொப்பன் புத்திதான உனக்கு..." 

"அட போம்மா... வெளாட்டு புள்ளிவ... எங்கியாவது வெளாண்டுட்டு வரும் விடும்மா..." ன்னு சொல்லி எழுந்து உள்ள போய்ட்டார்.

இன்னும் ஆறு மாசத்துல பெரிய மனுசியா ஆவப்போறவள வெளாட்டு புள்ளன்னு சொல்லிட்டு போறான் பாரு தம்பி... குமார் பக்கம் திரும்பிச்சி கிழவி. இவன்கூட சுத்துற பயலுவளுக்கு காடு, காணின்னு இருக்கு... இவனுக்கு என்ன மசுரு இருக்குன்னு அவனுவ கூட இவன் சுத்துறான். கோமணத் துணியாட்டம் கால் காணி கிடக்கு. அதுல என்ன விளையும். மானமும் முன்னமாரி பெய்ய மாட்டேங்குது. விளைச்சலும் ஒன்னும் சொல்றமாரி இல்ல. ஊருக்கு வந்தா நாலு நாளு சூத்த தரிச்சி உக்கார மாட்டேங்கிறான். மூணு புள்ள பெத்தும் திருந்த மாட்டேங்கிறான் பாரு ன்னு ஒரே புலம்பல். "கறி சொல்லப் போன கிழவனையும் இன்னும் காணலையே.. எங்க பொய் தொலைஞ்சாப்ல மனுஷன். போனா போன இடம், நின்னா நின்ன இடம்.. குடும்பக்காரன் செய்ற வேலையா இது... ச்சீ இவனுங்க கூட்டத்துல வந்து மாட்டிகிட்டு மாரடிக்கிரனே ..." கிழவியின் புலம்பல் உச்சஸ்தாயில் போய்க்கொண்டிருந்தது. உள்ளருந்து அக்கா கூப்டுச்சு. எழுந்து வீட்டுக்குள்ள போனான் குமார். குமார் உள்ள போனதும் மாமா வெளிய வந்துட்டாப்ல.

"என்னாக்கா கூப்ட..."

மொல்ல அக்கா பேசிச்சி... அந்த கிழவி எதாச்சி பொலம்பிகிட்டு இருக்கும் அங்க ஏன் உக்காந்து இருக்கவன்... அதான் உள்ள கூப்புடன்... போன வாரம் இந்தூரு புள்ள, மண்ணாங்கட்டி காரியத்துக்கு வந்தப்ப, அம்மாக்கு நூறு ரூவாய் பணம் குடுத்துட்டன் வாங்கிக்கிச்சா... வீட்டரிசி நாலு மாகாணி கொடுத்துட்டனே... அம்மா வச்சிருக்கா... நடக்கா வந்து எடுத்துட்டு போயிடுச்சா...

".................தெரியல க்கா..."

"ஏண்டா கால்ல செருப்பு இல்லாம வந்த.. செருப்பு இல்ல?"

"இருக்கு... மறந்தாப்ல வந்துட்டன்"

"செருப்பு போடக்கூட மறப்பானா மனுசன்? போவும்போது திட்டக்குடில நல்ல செருப்பா வாங்கிட்டு போ ... அம்மாகிட்ட காசு கொடுக்காத..."

"நானென்ன சின்ன பையனா... என்கிட்டே போயி இதெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க....? எனக்கு தெரியும்.... விடுக்கா"

"ஆமா இவன்தான் இப்ப பெரிய மனுசனாயிட்டான்..." என்ன ஆயி என்னாவ போவுது... என் கையாள பத்து ரூவா கொடுக்கறாப்ல இருக்குமா?" சரி அத வுடு.  நீ உள்ளாரயே படுத்துக்க... மாமா உன்கூட படுதுக்குவாரு... புள்ளிவளும், நானும் கிழவி கூட படுத்துக்கிறோம்.... அந்த கிழவர் வாசல்ல படுதுக்குவாப்ள... 

கிழவர் வந்தார்... விளையாடிகிட்டு இருந்த புள்ளிவள இழுத்துகிட்டு வந்தார். அக்கா மவன் கிழவர திட்டிகிட்டே வந்தான். வந்ததும் வராததுமா கிழவி பெரியவள திட்ட ஆரம்பிச்சிச்சி.

"யேய்... போய் சாப்ட்டு படுங்கடி ..." கிழவி சொன்னது. வாணாம்... பசிக்கல ன்னு மூணும் சொல்லிட்டு கிழவி விரிச்சி போட்டிருந்த போர்வையில போய் படுத்துகிச்சிங்க...

கிழவரும், கிழவியும் மொல மொலன்னு பேசிக்கிட்டே இருந்தாங்க.

"ரவ வெத்தல செருவு இருந்தா கொடேன்." கிழவி கேட்டுச்சி 

"ங்கொப்பன் லாரியில மூட்ட, மூட்டயா கொண்டாந்து கொட்டுன காசு பணம்  பேங்குல அடுக்கி கிடக்கு... போய் ஒரு கட்டு எடுத்து வாங்கிக்கயேன்"

"மான மருவாத கெட்டுப் போய்டும் பவுசி கெட்டப்பயல ... இவிங்க மணியக்கார் வேல பாக்குறதுக்கு, எங்கப்பன் மாளிவீடு கட்டிக் கொடுப்பான் இரு..." கோமணத் துணிக்கு ஐவேசி இல்லாதவ மொவனுக்கு பேச்சப்பாரு..."

"ஆமாமாம் ... ங்கொப்பன் வீட்டுலருந்து நீ கொண்டாந்து கொட்டுனதுல தான் என் பொழப்பு ஓடுதா... வாயல் பொடவய கட்டிக்கிட்டு வந்த வலப்பங்கெட்டவள... வாய மூடுடி..."

வாய கிண்டாத டா வண்ணாத்தி மவன... நீ பெரிய மவராசன்னு நினச்சி தான் எங்கப்பன் உன்கிட்ட என்ன கொண்டாந்து விட்டுட்டான்... இங்க வந்து என்னத்த வாரிகிட்டன். வந்த நாளா வக்கத்து தான கிடக்கேன். என் அப்பன் வீட்டுல கஞ்சிய குடிச்சாலும் கண்ணுக்கு மவுசா தான் இருந்தன். இங்க வந்துல்ல என் பவுசு போச்சு... அண்ணன் தம்பின்னு அண்ட வுட்டியா? இல்ல பாடி பரிதாசின்னு பாக்கத்தான் வுட்டியா? என் வாய கிளராத போய்டு பலபட்டற மவன ... சொல்லிப்புட்டேன்...

"போடீ போக்கத்தவன் மவள...  அய்வி அய்வி தான் என் வீட்டையே அஞ்சிகாசுக்கு ஐவேசி இல்லாம ஆக்கிபுட்ட.. பேரன் பேத்தி எடுத்த பொறவு அய்வ என்னாடி வேண்டி கிடக்கு..." அயப்பு வந்தா போயி சேரவேண்டிய காலத்துல அய்து புலம்புறா..."              

" ஆமாண்டா ப்பா... நா அழுவி என்னாவ போவுது... பொட்டக் கோழி கூவி பொழுது விடியுமா... இத்தன வருஷத்துல, நல்ல நாளு, பெருநாளுக்கு ஒரு சீலத்துணிக்கு வழியுண்டா...  நா வாங்கி வந்த வரம் அப்படி. யார சொல்லி நோவ"

இன்னும் உங்க கண்ணு அடங்கலையா ...  கிழவி ஏன்னா அவர்கிட்ட வம்படிச்சிகிட்டு இருக்க. வாய மூடிகிட்டு சும்மா இருக்க மாட்ட ..

ஆருடி இவ... ஆம்பளைனா என்னாமுனா பேசிபுடலாமா... வாலக்கருவாட்டுக்கு வக்கில்லாம கிடந்தவன் வாய்க்கு வந்தத பேசுறான்.. நா வம்படிக்கிறனா?

"அவரு சம்பாரிக்காம  தான் இத்தன வருசமா நீ குடும்பம் நடத்தினியா?"

"ஆமாமாம் அவரு சம்பாரிச்சி தான் மாளிவீடு கட்டி வச்சிருக்காரு பாக்கல..."      

"மாளிவீடு கட்டுனாத்தான் ஆச்சா? மூனுவேல முழுசா சோறு திங்கல? அது எங்கிருந்து வந்துச்சாம்?"

 "வாசல்ல படுக்க போட்டதுக்கே இந்த பேச்சு பேசுறாளே ... கட்டுலு மெத்த மட்டும் வாங்கி போட்டிருந்தான்  தலைல தூக்கிகிட்டு ஆடுவா போல ..." 

" ஏம்மா நீ அவகிட்ட வாயக் குடுக்கிற... அவ வம்ச பொறப்பே எம்மாம் குடுத்தாலும் இல்லன்னு கைய விரிக்கிறது தான. நீ போய் படும்மா..." கிழவர் சொன்னதும் அக்கா உள்ள வந்துச்சி...

"என் வம்சத்த எதுக்கு இயிக்கிறவன். என்னத்த அவங்களுக்கு எடுத்துட்டு போய் கொட்டுன? என்ன கட்டிக்கிட்டு வந்தநாளா எங்க அப்பனாத்தாளுக்கு ஒத்தரூவாக்கு  வெத்தல செருவு வாங்கி குடுத்திருப்பியா? வாய மூடிகிட்டு குந்திரு. இல்லனா மான மருவாத போய்டும்.            

இப்பிடியே கிழவரும், கிழவியும் எம்மாம் நேரம் சண்ட போட்டாங்களோ. விரிச்சி போட்டிருந்த பாய்ல மல்லாந்து படுத்தது தான் தெரியும். எப்படி தூங்கினானோ தெரியல... மாமாவோட குறட்டை சத்தம் தான் எழுப்பி விட்டுச்சி. மணியார் வீட்டு மோட்டார் ஓடுராப்ள சத்தம். இதுக்கு வீட்டுக்கே போயிருக்கலாம் ன்னு நினைச்சி தவிச்சான். இனி தூக்கம் அவ்ளோதான். புரண்டு புரண்டு படுக்கிறான் தூக்கமில்ல. கண்ணு எரிச்சல் வேற. தூங்க விடாம அவர் பாட்டுக்க மோட்டர போட்டாப்ல சத்தம் போட்டு தூங்குறாரு. மேக்கூர மோட்டுவானத்துல பல்லி ஓடுற சத்தம் வேற பயமா இருக்கு. ஒருபக்கம் செவுரு இல்ல. அந்த பக்கம் வழியா பூச்சி பூரான் வந்தா என்னாவும். தேவையில்லாத யோசனை வேற. இந்த மனுசன் நல்லா தூங்குராப்ல ன்னு அவர் மேல கோவம். கோவத்துல மாமா கையை புடிச்சி கிள்ளிவுட்டா ன். முயிச்சிகிட்டார்.  தூங்குராப்ள நடிச்சிகிட்டே அவர பாக்குறான். சுத்தியும், முத்தியும் பார்த்திட்டு மறுபடி அவர் தூங்க ஆரம்பிச்சிட்டார். மறுபடி குறட்டை... அப்படியும் இப்படியுமா புரண்டு, புரண்டு தூக்கமில்லாம தவிக்கிறான். பொழுது விடிஞ்சா போதும், கறியும் வாணாம் காசும் வாணாம்... வீட்டுக்கு போயி நல்லா தூங்கணும். மணி மூணுக்கு மேல இருக்கும். தூரத்துல நாய் குரைக்கிற சத்தம். ஒன்னிரண்டு இல்ல. கும்பலா சேர்ந்து குறைக்கிதுங்க. என்னவா இருக்கும்? ஏன் இந்த நேரத்துல இவ்ளோ நாய்ங்க கத்துதுங்க.. பல யோசனை. கூடவே பயம். 

நாலஞ்சி வீடு தளி குடுகுடுப்ப சத்தம். நேரம் ஆவ ஆவ சத்தம் கிட்டக்கயே கேட்க ஆரம்பிச்சிச்சி. குடுகுடுப்பை காரன்தான் வீட்டுக்கு வீடு குறி சொல்றான். அக்கா வீடு தான் அடுத்தது. இங்க வந்து என்ன சொல்வானோ தெரியல. விடியற்காலை வந்து குறி சொல்லிட்டு காலையில வந்து காசோ, அரிசியோ வாங்கிட்டு போவாங்க. வெய்யில் காலத்துல தான் வருவாங்க. நடுச்சாமத்துல சுடுகாட்டுக்கு போய் குறிகேட்டுவந்து சொல்வாங்கன்னு பெரியவங்க சொல்வாங்க. அது உண்மையோ பொய்யோ தெரியாது. அவங்க குறிசொல்லும் போது, எழுந்து வெளிய வரக்கூடாதுன்னு சொல்வாங்க. வந்தால், சாபம் கொடுத்திருவாங்க ன்னு சொல்வாங்க.  

குடு... குடு...குடு... 
நல்லகாலம் வருகுது....நல்லகாலம் வருகுது....
குடு... குடு...குடு... குடு...
ராப்பகலா உழைக்கிற நிம்மதி தான் ரவயும் இல்ல
குடு... குடு...குடு... குடு...குடு... குடு...
கண்ணுறங்கி நாளாச்சி கண்ணுதண்ணி கடலாச்சி
குடு... குடு...குடு... குடு...குடு... குடு...
நிம்மதியா நீ தூங்கி வருசம் கணக்கு ஆயிப்போச்சி...
குடு... குடு...குடு... குடு...குடு... குடு...குடு... குடு...குடு...
கவலய விட்டுத்தள்ளு காளி உனக்கு துணையிருக்கா...
குடு... குடு...குடு... குடு...குடு... குடு...குடு... குடு...குடு...  
வீட்டுல நல்லகாரியம் நடக்கப் போவுது...
குடு... குடு...குடு... குடு...குடு... குடு...குடு... குடு...குடு... குடு...
ஜக்கம்மா மனசு வச்சிட்டா.... ஜென்ம பகை தீர்ந்து போகும்...
குடு... குடு...குடு... குடு...குடு... குடு...
ஆத்தாவோட பார்வ பட்டு நாளு எட்டாச்சி...
குடு... குடு...குடு... குடு...குடு... குடு...குடு... குடு...
நீ பட்ட பாடு வீணாவது...
குடு... குடு...குடு... குடு...
மக்கமாரு நல்லா இருக்கும். மனச மட்டும் தளர விடாத 
குடு... குடு...குடு... குடு...குடு... குடு...குடு... குடு...
நல்லகாலம் வருகுது....நல்லகாலம் வருகுது....
குடு... குடு...குடு... குடு...குடு... குடு...குடு... குடு...

கடுகுடுப்பையின் சத்தம் நகர்ந்து போவது போல் இருந்தது. சத்தம் இப்போது அடுத்த வீட்டின் முன்பாக கேட்கிறது. கிழவர் மொல்ல குரலெடுத்து கிழவியிடம் பேசுவது கேட்கிறது. பெரியவ தான் செலவு வெச்சிடுவா போலிருக்குன்னு கிழவி சொல்ல, ஆமாங்குரன் குடுகுடுப்பகாரனும் அதான் சொல்றான்னு நினைக்கிறேன். குடுகுப்பையின் சத்தம் இப்போதும் சுத்தமாக கேட்கவில்லை. மணி நாளாச்சா பாரு... மாடறுப்பானுவ. நா போயி ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடுறேன்ன்னு கிழவர் கிளம்பிட்டார்... 

கிழவி சொன்னது போல, அக்கா மவ பெரிய மனுசியாயிட்டா, எப்படியும் பத்தாயிரத்துக்கு மேல வேணுமேன்னு நினைக்கும் போதே தூக்கம் எங்கே போனதோ தெரியல தாய்மாமனுக்கு ....   

திங்கள், 6 ஏப்ரல், 2015

மௌனத்தின் வாக்குமூலம் (சிறுகதை)

மார்கழி பனிக்காலமது. மணி விடியற்காலை நான்குக்கு மேலிருக்கலாம். ஊரெங்கும் மயான அமைதி. காஷ்மீரை போல சென்னையும் வெடவெடக்கிறது. தெருவில் எந்த சப்தமும் இல்லை. இரவு நேரத்தில் சப்தமிட்டுக் கொண்டே இருக்கும் நாய்கள் கூட குளிருக்கு இதமான இடம் தேடி ஒளிந்துகொண்டன போல. அருகில் வீடுகள் இருப்பதற்கான சாட்சிகளே இல்லாதது போலவும், இது நகரம் என்பதற்கான சான்றுகளே இல்லாதது போலவும் மௌனம் நீள்கிறது. குளிருக்கு இதமாக மனைவியையும், அதற்கு மேல் கம்பளி போர்வையையும் கட்டிக் கொண்டு உறங்குகிறான் கணேஷ். தூக்கத்தில் எதையோ தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருக்கிறான். தூக்கத்தின் உளறல்கள் தெளிவாக இல்லை. இருந்தாலும் அவன் ஒரு பெண் பெயரை தொடர்ந்து சொல்வதை கேட்ட பிரியாவுக்கு தூக்கம் விலகுகிறது. அரைத்தூக்கத்திலே கணேஷ் என்ன சொல்கிறான் என்பதை அறியும் ஆவலில் தன் செவிகளை கூர்மைபடுத்திக் கேட்கிறாள். எதுவும் விளங்கவில்லை. வி..........னோ என்ற எழுத்துக்கள் மட்டும் ஒவ்வொரு எழுத்துக்கும் நீண்ட இடைவெளியை எடுத்துக் கொள்கின்றன. கணேஷ் சொல்வதில் இந்த இரண்டு எழுத்துக்கள் மட்டும் நன்றாக விளங்குகிறது. இந்த இரண்டு எழுத்துக்களையும் சேர்த்தால் ஒரு பெண் பெயரை அது தாங்கி நிற்கிறது என்பதுவே ப்ரியாவின் தூக்கத்தை கலைத்துவிட்டது. அடுத்தடுத்த நாட்களில் கூட அதே உளறல் தொடர்ந்தது. இப்போதெல்லாம் இது தினமும் கேட்கும் சங்கதியாகிவிட்டது.  தூக்கத்தில் மட்டும் தான் இப்படி உளறுகிறான். நிஜத்தில் அவனின் அன்பும், அரவணைப்பும் அவளை எப்போதுமே சோர்வடைய செய்ததில்லை. இருந்தாலும் எதோ ஒரு பெண்ணின் பெயரை அவன் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதில் இருக்கும் மர்மத்தை தெரிந்து கொள்வது என்பதை தீர்மானம் செய்து கொள்கிறாள். கண்களை துடைத்துக் கொண்டு கணேஷின் முகத்தை அவள் பார்க்கிறாள். அந்த முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவன் நன்றாக உறங்கி கொண்டிருக்கிறான். நிச்சயமாக அது கனவுதான். இருவரையும் இணைத்திருக்கும் அந்த போர்வையில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, படுக்கையை விட்டு மெல்ல எழுந்து வெளியே வருகிறாள். ஜன்னல் கதவுகளை திறந்து யாருமற்ற அந்த தெருவை பார்க்கிறாள். மெல்ல நடந்து படுக்கையறையை விட்டு வெளியேறி பால்கனி பக்கம் வந்து நின்றுகொண்டு மீண்டும் அந்த தெருவை பார்க்கிறாள்.

அதிகாலை வானம் எனக்கென்ன என்பது போல வெறிச்சோடிக் கிடக்கிறது. விண்மீன்கள் கூட சொற்பமாக தான் அங்கொன்றும், இங்கொன்றுமாக தெரிகிறது. மிக கடுமையான குளிர்காற்று வீசுகிறது. வீசும் குளிர்காற்றை அவள் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. குளிர் அவளை வாட்டவில்லை என்பதை அவளின் அலட்சியாமான தோற்றத்திலே தெரிந்து கொள்ளமுடிகிறது. குளிரை விட, கணேஷின் உளறல்களிலே அவளின் ஒட்டுமொத்த கவனமும் புதைந்திருக்கிறது. தன்மீது அவன் செலுத்தும் அன்பில் என்றைக்குமே அவள் குறை கண்டதில்லை. போதும் போதும் என்கிற அளவுக்கு அவன் முத்தங்களை வாரி இரைப்பான். அவன் கொடுக்கும் முத்தங்கள் எப்போதும் இவளுக்கு திகட்டியதே இல்லை. நீண்ட நேரமாக அப்படியே சிலைபோல நின்று கொண்டிருக்கிறாள்.

தூக்கம் கலைந்து கண்விழித்து பார்த்த கணேஷுக்கு, அருகில் ப்ரியா இல்லாதது பெரிய ஏமாற்றம். எப்போதும் இருவரும் ஒன்றாக எழுவது தான் வழக்கம். முதலில் யார் எழுந்தாலும், மற்றவரையும் எழுப்பிக் கொண்டுதான் படுக்கையை விட்டு வெளியேற வேண்டும் என்பது இருவருக்கும் ஏற்பட்ட காதல் உடன்படிக்கை. ஒரு துளி காபியை போல, ஒரு துளி முத்தம் தான் இவ்வளவு நாட்களாக அவர்களின் அன்றைய நாளை துவக்கி வைத்துக் கொண்டிருக்கிறது. இன்று கிடைக்காமல் போனதில் கணேஷிற்கு ஏமாற்றம். ஒருவேளை காபி போட கிச்சனுக்கு போயிருக்கலாம் என்று நினைத்த கணேஷுக்கு, அங்கும் இல்லாதது அடுத்த ஏமாற்றம். ஏமாற்றத்தை லட்சியம் செய்யாமல், அடுப்பை பற்றவைத்து அவனே காபி போட்டுக் கொண்டு கிச்சனை விட்டு வெளியேறி, தன் காதல் மனைவியை தேடுகிறான். அவள் பால்கனியில் நின்றுகொண்டிருப்பதை பார்த்து, இன்ப அதிர்ச்சியை கொடுக்கலாம் என்றெண்ணி, பூனை நடையாய், மெல்ல மெல்ல நடந்து அவளருகில் செல்கிறான். அருகில் சென்று கையில் இருந்த காபி கோப்பையை, அவள் கைமேல் வைக்கவும், சூடு கொடுத்த அதிர்ச்சியில் விசும்பி கொண்டு அவள்  திரும்பையில், இவன் கையில் இருந்த காபி கோப்பைகள் தடுமாறி கீழே விழுகின்றன. கீழே விழுந்த வேகத்தில் உடைந்த சில்லுகளின் மீது அவள்  கால்வைக்கப் போவதை அறிந்த கணேஷ், அப்படியே தன் கைகளால் அலேக்காக தூக்கி கொண்டு மெல்ல நகர்கிறான். அருகில் இருந்த ஊஞ்சலில் அமர செல்வதற்கு முன்பாக ப்ரியாவின் முகத்தோடு, முகம் புதைத்து முத்த மழை பொய்கிறான். கணேஷின் தூக்க உளறல்களால் கலங்கி போயிருந்த ப்ரியாவுக்கு, அந்த அணைப்பும், அதுகொடுத்த கதகதப்பும், பாதுகாப்பாய் உணரசெய்தது. அந்த அணைப்பும், முத்தமும் அவளுக்கு அவசியமாய் இருந்தது. அதை அவளும் மிகவும் விரும்பி ஏற்றுக்கொண்டாள். காதலுடன், சேர்ந்துகொண்ட ஊடலால் இருவருமே மீண்டும் காதலர்களாகி போனார்கள்.

ப்ரியாவும், கணேஷும் காதலித்து திருமணம் செய்துகொண்ட புதிய தம்பதிகள். அவர்களுக்குள் ஏற்படும் எந்த சண்டையும், ஒரு பொழுதை கூட கடந்ததே இல்லை. ஒருவரை ஒருவர், விரும்புகிறார்கள் என்பது உண்மை. ஆனால் முழுமையாக புரிந்து கொண்டார்களா? என்பதெல்லாம் இருவருக்குமே தெரியாத ரகசியம். அந்த ரகசியத்தை அவர்கள் தோண்டிப் பார்க்க நினைத்ததே இல்லை. அது அவசியமும் இல்லை என்று நினைக்கிறார்கள். இருவருக்கும் சண்டைகள் அவ்வப்போது ஏற்படுவது வழக்கம். அதை கடக்கும் பக்குவம் அவர்களுக்கு தெரியும். கணேஷ் ! நீ செய்வதில் எனக்கு பிடிக்காதவை இருக்கின்றன. நான் செய்வதில் உனக்கும் பிடிக்காதவை இருக்கின்றன. ஆனால் எதிர் எதிர் துருவங்கள் தான் ஒட்டிக்கொள்ளும் என்று ப்ரியா எப்போதும் சொல்வாள். உன்னோடு இருக்கும் போதுதான் நான் பாதுகாப்பாய் உணர்கிறேன் என்றும் முத்தமிடுவாள். கணேஷிற்கு, ப்ரியாவின் உதடுகளை சுவைப்பது என்றால் அவ்வளவு ப்ரியம். நல்ல சுவைமிக்க ஆரஞ்சு பழத்தை சுவைப்பது போலிருக்கிறது என்பான். சில நேரங்களில் கொடுக்காமல் ஏமாற்றுவாள். நீண்ட நேர கெஞ்சலுக்கு பிறகு பாவம் என்றெண்ணி சம்மதம் சொல்லி அருகில் வந்தால், உதட்டை கடித்துவிடுவான். ஒருமுறை அப்படித்தான் கடித்துவிட்டான். வலிகளை தாங்கி கொண்ட ப்ரியா, முதல்முறையாக உன்னோடு நானிருக்கும் போதெல்லாம் என் இதழ்களை பூச்சி ஒன்று கடித்துவிடுகிறது என்று ஹைக்கூ சொன்னாள். அதன் பிறகு ப்ரியாவை முத்தமிடும் போதெல்லாம் அவனும் சொல்வான்... "இப்போது ஒரு பூச்சி உன்னைக் கடிக்கப்போகிறது" என்று...  

மார்கழி பனிகளை விரட்டிக் கொண்டு வந்த காலைசூரியனின் மஞ்சள் வெய்யிலின் இளஞ்சூடு இருவருக்குள்ளும் பரவிய பிறகே காதலின் ஊடல் கலைந்து கண் விழித்தார்கள். அதுவரை அவர்கள் இந்த உலகிலே இல்லை. பூமிக்கு வந்த புதிய மனிதர்களை போல ஒருவரை பார்த்து சிரித்துக் கொண்டனர். இவர்களின் இந்த ஊடல் நிலையை நீண்டநேரமாக பார்த்திருந்த எதிர்வீட்டு மல்லிகா ஆண்டி, காலையிலே காதலா? இரவின் நீளம் போதவில்லையா? என்று நக்கல் அடித்தாள். வெட்கம் பீரிட்டு முகம் சிவந்து  உள்ளே எழுந்து ஓடியவளை, கணேஷும் துரத்திக் கொண்டு ஓடினான். நேராக கிச்சனுக்கு ஓடிய ப்ரியா, இருவருக்கும் காபி போட்டுக் கொண்டு, சோபாவில் அமர்ந்திருந்த கணேஷ் அருகில் வருகிறாள். கணேஷிற்கு காபி கொடுத்த ப்ரியாவை, கணேஷின் உளறல்கள் மீண்டும் ஆக்கிரமித்துக் கொண்டன. கேட்கலாமா? வேண்டாமா? என்று தன் மனதிற்குள்ளே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள். தொண்டை வரை உருண்டோடி வரும் வார்த்தைகளை கஷ்டப்பட்டு தடைசெயகிறாள். முதல்முறையாக கணேஷோடு பேசுவதற்கு வார்த்தைகளை தேடுகிறாள். இந்த தடுமாற்றத்தை அவள் விரும்பவே இல்லை. கேட்டுவிடுவது தான், தனக்கும், இந்த உறவுக்கும் நல்லதாக இருக்கும் என்பதால் கேட்டுவிடுவது என்பதை உறுதி செய்துகொண்டாள். இதமான காபியின் முதல் சொட்டை கணேஷ் உறுஞ்சும் போது, ப்ரியா கேட்டே விட்டாள்….

கணேஷ் ! யார் அந்த வி .... னோ?

அவள் மிக சாதரணமாக தான் கேட்டாள். ஆனால் பலமாக தாக்குண்டது போல நிலைகுலைந்து போனான் கணேஷ். பனிக்காலத்தில் கூட உடலெல்லாம் வியர்ப்பது போன்ற உணர்வு. சகஜமாக இருப்பது போல, முயற்சித்து தோற்றுப் போனான். தொண்டைக்குள் சிக்கிய மீன்போல, உறுஞ்சி இழுக்கப்பட்ட காபி சிக்கி கொண்டிருக்கிறது. பிரகாசமான அவனின் முகம், இருளடைந்து போதை அவளும் ரசிக்கவே இல்லை... தட்டுத் தடுமாறி கேட்கிறான்       

எ.... எ..எ..எ..எந்த வினோ? பிரியா...

நீ கனவில் வினோ என்று மிக அழுத்தமாக உச்சரித்தாய்... அந்த பெயருக்கு நீ கொடுத்த அழுத்தம் கனவை மீறியது. அதுதான் உனக்கு முன்பாக என்னை எழுந்திருக்க செய்தது. என்கிறாள் ப்ரியா மிக நிதானமாக....
தெரியல... எதோ கனவாக இருக்கலாம்... என்று சொல்லி மீதி காபியை வைத்துவிட்டு பாத்ரூம்க்குள் சென்று மறைந்து கொண்டான்.

கணேஷின் இந்த செயலை அவள் ரசிக்கவில்லை.. அவள் கொடுக்கும் காபியின் கடைசி துளியையும் கூட, முதல் துளியை சுவைப்பது போல ரசித்து குடிப்பவன். இன்று மீதம் வைத்து செல்கிறான். தினமும் கணேஷை குளிக்க செய்ய ப்ரியா பலமுறை வற்புறுத்த வேண்டி இருக்கும். இன்று தானாக குளிக்கவேண்டு செல்கிறான். இதுவெல்லாம் சேர்ந்து அவளை உருக்குலைத்துக் கொண்டிருக்கிறது. முட்டிக் கொண்டு வரும் அழுகையை கட்டுப்படுத்தி அமைதியாக நினைக்கிறாள். மீண்டும் மீண்டும் தொற்றுக் கொண்டே இருக்கிறாள். அவன் மௌனத்தில் புதைந்திருக்கும் வினோ என்னைவிட அவ்வளவு முக்கியமானவளா? என்ற கேள்வியை திரும்ப திரும்ப அவள் மனம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அவன் மௌனத்தை அவனாகவே உடைக்கட்டும்... இனி நாமாக எதையும் கேட்பதில்லை... என்று முடிவு செய்து கொண்டு மீண்டும் சென்று படுக்கையில் சரிந்து கொண்டாள்...       

பாத்ரூம்க்குள் சென்ற கணேஷ், ஷவரை திறந்துவிட்டு, கீழே அமர்ந்துவிட்டான். சீரான வேகத்தில் குளிர்ந்த நீரும், வென்னீரும் அவனை நனைத்துக் கொண்டிருக்கிறது. குளிர்ந்த நீர், அவன் மனதின் அனலை அடக்கவும் இல்லை. வெந்நீர், அவனின் குளிரின் நடுக்கத்தை போக்கவும் இல்லை. அவனுள் அனல்காற்றாகவும், குளிர்காற்றாகவும், மௌனத்தின் ரகசியகமாகவும் வாழ்ந்து கொண்டிருப்பது யார்? வினோ... வினோவே தான்...
யார் சொன்னது மௌனம் மென்மையானதென்று. இந்த மௌனத்தின் முதல் எழுத்து கனமான கரும்பாறையை போலல்லவா இறுகி கிடக்கிறது... அந்த முதல் எழுத்தை பெயர்ப்பதற்குள் மொத்த ஜீவனும் தீர்ந்து போவதாய் இருக்கிறது. தன் மேல் விழும் ஒவ்வொரு துளி நீரும் தன்னையும், தன் மௌனத்தையும் கரைத்துக் கொண்டிருப்பதாக உணர்கிறான். அது உண்மையும் தான்... வெந்நீர் இளஞ்சூட்டின் கதகதப்பில், ஜில்லென்ற குளிர்நீரின் விரைப்பில் மௌனம் கரைந்து கொண்டிருக்கிறது... மௌன அலைகளோடு ஊடுருவி பயணத்தை துவங்கி, மௌனத்தோடு உரையாடுகிறார் கணேஷ்...  

வினோ கனவல்லவே... அவளுக்கும் தனக்குமான உறவு கனவல்லவே... அந்த நட்பு அவ்வளவு பரிசுத்தமானது. தூக்கத்தில் வினோவின் பெயரை சொன்னது வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால் வினோ யாரென்றே  தெரியாதென்பது பொய். சுத்தப் பொய். நான் ஏன் பொய் சொன்னேன்? ப்ரியாவிடம் மறைக்கும் அளவுக்கு வினோ ரகசியமானவளா? என்னவென்று சொல்லி அறிமுகம் செய்வது? தோழியென்றா? ஆனால் வினோவுக்கும் எனக்கும் இப்போது எந்த தொடர்பும் இல்லையே... அந்த உறவு அறுந்து போனதல்லவா... அறுக்கப்பட்டதல்லவா... வினோவும் நானும் எந்த குற்றமும் செய்துவிடவில்லையே...

வினோ என் மீது அன்பு கொண்டிருக்கிறாள்... என் மீது தீராத நம்பிக்கை  வைத்திருக்கிறாள்... என் உணர்வுகளை முழுமையாக நேசிக்கிறாள் ... என்னோடு நாள் முழுவதும் நட்பு பாராட்ட விரும்புகிறாள்... எனக்கும் அவள் மீது அன்பிருக்கிறது, நம்பிக்கை இருக்கிறது... அவளின் உணர்வுகளை நேசிக்கிறேன்... மணிக்கணக்கில் அவளோடு உரையாட நினைக்கிறேன், நட்போடு நடைபழக விரும்புகிறேன்... அவ்வளவுதானே. இல்லை இல்லை வினோ வேறென்றும் சொன்னாளே... நான் காதலிக்க தகுந்தவன் என்று சொன்னாள். ஒரு இரண்டு ஆண்டுகள் கழித்து நான் பிறந்திருக்கலாம் அல்லது ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னாள் நாம் சந்தித்திருக்கலாம் என்று தன் விருப்பத்தை சொன்னாள். ஆனால் எந்த நிபந்தனையும் இன்றி அந்த இடத்திலே அந்த சிந்தனையை நாங்கள் அறுத்துக் எறிந்தோமே...

முதல்முறையாக வினோவை நான் எங்கு பார்த்தேன். அது ஒரு வசந்தகாலம். ஞாயிற்றுகிழமை நாளொன்றில் சிறுவர் பூங்காவின், புங்க மரத்தடியில் நான் நின்றுகொண்டிருந்தேன்.  அந்த புங்க மரம் பூக்களை பொழிந்து என்மீது அன்புகாட்டிக் கொண்டே இருந்தது. பூங்காவில் மகிழ்ச்சி ததும்பி கொண்டிருந்தது. அந்த பூங்காவின் மூளை முடுக்கெல்லாம் புன்னகை பூக்களை சிறுவர்கள் தூவி இருந்தார்கள். கவலையோடு வந்தமர்ந்தவர்கள் கூட, சில நொடிகளில் தங்களின் கவலைகளை மறந்து, கலகலப்பாக அமர்ந்திருந்தார்கள்.  அந்த பூங்கா குழந்தைகளின் உலகம். அவர்களே அதை ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். பிள்ளைகளின் சிரிப்பில் அம்மாக்கள் லயித்திருந்தார்கள். தன் இரண்டு வயது குழந்தையோடு அந்த பூங்காவிற்கு வந்தவள் தான் வினோ. நண்பர் நடத்தும் யோகா நிலையத்தின் துண்டறிக்கைகளை அங்கு வருபவர்களுக்கெல்லாம் நான் விநியோகித்துக் கொண்டிருந்தேன். பச்சைநிற புடவையில் பளிச்சென்று வந்தாள் வினோ. நிலவு போன்று உருண்டை முகம். அதில் எப்போதும் நிரம்பி வழியும் புன்னகை நதி.   குள்ளமென்று சொல்ல முடியாது. நெடுநெடு உயரமும் இல்லை. பூசினார் போல் உடம்பு. குழந்தை பிறந்த பின்பு உடம்பு ஏறி இருக்கலாம். என்னை கடந்து செல்ல முயன்ற வினோவை வழிமறித்து கையில் இருந்த துண்டறிக்கைகளை கொடுத்தேன். அதோடு என் கடமையை முடித்திருக்கலாம். ஆனால் நான் அப்படி செய்யவில்லை. மேடம்... நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க... உங்க உடம்பை குறைத்தால் தேவதை மாதிரி இருப்பீர்கள்.... இதை நான் வியாபார நோக்கோடு தான் சொன்னேன். இப்படி சொன்னாள் நண்பரின் யோகா நிலையத்திற்கு வர அவர்கள் சம்மதிக்கலாம் என்பது என் கற்பனை. ஆனால் இதற்கு முன் கடந்து சென்ற எந்த பெண்களிடமும் நான் இப்படி சொல்லவில்லையே... ஏன் இவளிடம் மட்டும் இப்படி சொன்னேன் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கையில் தன்னுடைய புன்முறுவலால் நான் சொன்னதில் தவறேதும் இல்லையென்று சொல்லி வினோ கடந்துவிட்டாள். 

அடுத்தடுத்த வாரங்களில் எதேச்சையாக பூங்காவில் பார்க்கையில் புன்னகை பரிமாற்றம் வேகமாகவே நடந்தது. அந்த பூங்காவின் அழகை போலவே, அங்கு சிரித்து விளையாடும் மழலைகளின் சிரிப்பின் பரிசுத்தத்தை போலவே எங்களின் நட்பு தொடரும் என்பதை நாங்கள் இருவருமே கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை. ஆனால் நட்பு வளர்ந்தது. குழந்தைக்காக பூங்காவிற்கு வந்த வினோவும், நண்பனுக்கு உதவி செய்ய வந்த நானும் இப்போதெல்லாம் எங்களுக்காக, எங்கள் நட்பை வளர்ப்பதற்காக  வர தொடங்கி இருந்தோம். அடுத்தடுத்த வாரங்களில் செல்போன் எண்கள் பரிமாறி கொள்ளப்பட்டன. நட்பின் உரையாடல் தொடர்ந்தது. புளியோதரை முதல், புங்கமரத்தின் பூக்கள் வரை அந்த உரையாடலில் பேசிக்கொள்ளப்பட்டன. பரஸ்பரம் ஒருவரை ஒருவர் நம்பிக் கொண்டோம். வினோவிடம் என் காதலை பற்றியும்காதலி ப்ரியாவை பற்றியும் சொன்னேன். மனதார அவளும் வாழ்த்தினாள். 

மற்றுமொரு ஞாயிறு மாலை அது. அதே பூங்கா. குழந்தைகளின் குதூகலத்திற்கு கொஞ்சமும் குறைவில்லை. வினோவை முதல்முறையாக பார்த்த அதே புங்கமரத்திற்கு கீழ் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போதும் புங்கமரம் பூக்களை பொய்ந்து கொண்டிருந்தது. என் கையில் துண்டறிக்கைகள் இல்லை. வினோவை பார்க்க தான் நிற்கிறேன். இந்தமுறை வினோ தன் கணவரோடும், குழந்தையோடும் வருகிறாள். அவர்கள் மூவருமாக வருவது அவ்வளவு அழகாக இருந்தது. வழக்கம்போலவே வினோவின் முகத்தில் அவ்வளவு பிரகாசம். பனி மூட்டத்தை ஊடறுத்து பாயம் மஞ்சள் வெயில் போல அவ்வளவு பிரகாசம் அந்த முகத்தில். வினோ முகத்தில் இருக்கும் சந்தோஷ ரேகைகள் தான் அவளை மேலும், மேலும் அவளது அழகை கூட்டுகிறது. Made for Each Other ன்னு சொல்வாங்களே அந்த வார்த்தைக்கு உயிர் கொடுத்துக் கொண்டு மூவருமாக நடந்து வருவது அவ்வளவு அழகு. தன் கணவர் குழந்தையோடு வினோ எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்பதற்கு கட்டுடைத்து வெளியேறும் அணைநீர்போல... எப்போதும் வழிந்தோடி கொண்டிருக்கும் அந்த புன்னைகை நதியே சாட்சி. பூங்காவில் இருந்து வெளியேற எத்தனிக்கையில் என் முன்னாள் வினோ. அந்த நிமிடம் என் மொத்த சரீரத்திலும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. வழக்கமான புன்னகையை உதிர்த்துவிட்டு நகர நினைக்கையில் தான் அவள் சொன்னாள்... அவள் சொன்னது இதுதான் ஒரு இரண்டு ஆண்டுகள் கழித்து நான் பிறந்திருக்கலாம் அல்லது ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாம் சந்தித்திருக்கலாம் எந்த பதிலுமின்றி வலுக்கட்டாயமாக அங்கிருந்து நகர்ந்து கொண்டேன். எந்த பதிலும் இன்றி அவன் நகர்ந்து சென்றதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை, விரும்பவும் இல்லை...

அவள் சொன்னதில் தவறேதும் இல்லை. எனக்கும் அவளை பிடித்திருக்கிறது தான். ஆனால் அந்த எண்ணம் அதற்கு மேல் வளர்வதை நாங்கள் இருவருமே விரும்பவில்லை. அதனால் தான் அந்த எண்ணத்தை அங்கேயே கிள்ளி எறிந்துவிட்டு கிளம்பினோம். அன்றிரவு எனக்கொரு குறுஞ்செய்தியை வினோ அனுப்பினாள். உன் மௌனத்தின் மொழியறிந்தேன். நீ அன்பானவன், உன்னோடு உரையாடுகையிலும், உன்னருகில் நிற்கையிலும் நான் அன்பின் அரவணைப்பில் ஆகாயத்தில் மிதக்கிறேன். எத்தனை பெரிய சாகசத்தையும் செய்யும் வல்லமையை, உன் அன்பு எனக்கு கொடுக்கிறது. வானத்தை எட்டி உதைக்கும் சக்தி அது. நீ பரிசுத்தமானவன்...

அதற்கடுத்த நாள் எங்கள் உறவை, நட்பின் புனிதத்தை, அன்பின் அழகை உரசி பார்க்கும் சம்பவம் ஒன்று நடக்கப் போகிறது என்பதை நாங்கள் அறிந்திருக்கவே இல்லை. அது விரும்பத்தகாத அவதூறு. கெட்டுதட்டிப் போன சமூகத்தில் புழுத்துப் போய் கிடக்கும் நோய்.. அது அவதூறாக இருந்தாலும் கூட, கொடும் நோயாக இருந்தாலும் கூட, அந்த நிகழ்வு தான், என் காதல் மனைவி, என்னருகில் இருக்கும் போதும், கனவை மீறி வினோவை நினைக்க தூண்டுகிறது...

வினோவின் தோழி கீதா செய்த இழிவான காரியத்தை நாங்கள் விரும்பவில்லை. அவள் இப்படி ஒரு துரோகத்தை செய்வாள் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை நாங்கள். வினோவுக்கும், எனக்குமான நட்பை கீதா நன்கு அறிவாள். மறைத்து, மறைத்து பேசவேண்டிய அளவுக்கு எங்களுக்கும் எந்த ரகசியமும் இல்லை. நானும், வினோவும் பரிமாறிக் கொள்ளும் குறுஞ்செய்திகள் கீதாவுக்கு நன்றாக தெரியும். எங்கள் உறவு குறித்து எந்த ரகசியத்தையும், கீதாவிடம் வினோ மறைத்ததே கிடையாது. வினோவுக்கு கவிதை எழுதும் அபாரத் திறன் இருந்தது. அவ்வப்போது சில தலைப்புகளை கொடுத்து, நான் கவிதை எழுதி வாங்குவேன். வினோ பெயரில் கவிதை தொகுப்பு ஒன்று வெளியிடலாம் என்பது என் திட்டம். வினோவுக்கும், கீதாவுக்கும் ஏற்பட்ட முரண், நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வந்திருப்பது எனக்கு தெரியாது. அதைப்பற்றி என்னிடம் எதுவும் வினோ பகிர்ந்து கொண்டதே இல்லை. யாரைப் பற்றியும், மற்றவர்களிடம் குறை கூறும் பழக்கம் வினோக்கு இருந்ததில்லை. அவர்களின் சண்டை முற்றிய நிலையில் தான் இப்படி ஒரு இழிவான துரோக செயலை கீதா செய்துவிட்டாள். எங்கள் நட்பை, கொச்சைப்படுத்தி, வினோவின் கணவரிடம் போட்டுக் கொடுத்துவிட்டாள்.  நல்லெண்ணத்தில் கவிதை பெற்ற என் முயற்சியை, கொச்சைப்படுத்தி, வினோ என்னை ஆத்மார்த்தமாக காதலித்து என்னை வர்ணிப்பதாக கூறிவிட்டாள். பரிசுத்தமான எங்கள் நட்பை, கள்ளத் தொடர்பாக கீதா வர்ணித்த போதும், மிக நிதானமாக அந்த பிரச்சனையை கையாண்டாள் வினோ. தன் கணவன் முன்னாள், தன் ஒழுக்கம் கேள்விக்குள்ளாக்கப்பட்ட போதும், என் மீது எந்த களங்கமும் படிந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறையோடு இருந்தாள். நான் விரக்தி அடைந்துவிடக்கூடாது என்பதிலும் அவ்வளவு அக்கறையோடு, மற்றொரு தோழி மூலம் என்னை ஆற்றுப் படுத்திக் கொண்டே இருந்த என் வினோவின் அன்புக்கு ஈடாக சொல்ல, இந்த உலகில் எதுவுமே இல்லை. அவளின் அன்பு, மழைத்துளியை போல பரிசுத்தமானது. அதை உரசி பார்க்க இயலாது, உணர்ந்து தான் பார்க்க வேண்டும்.

நானும் வினோவின் கணவரிடம் பேசினேன். தன் மனைவியை நான் ஆத்மார்த்தமாக நம்புவதாக அவர் சொன்னார். தகுதி இல்லாதவர்கள் எல்லாம், என் மனைவியின் தரத்தை பற்றி பேசும் நிலை வந்துவிட்டதே என அவர் வருந்தினாரே ஒழிய, வினோ மீது அவருக்கு எந்த கோபமும் இல்லை. ஆனாலும் வினோ என்னோடு பேசுவதற்கு விருப்பமாக, என்னோடு நட்பு பழக ஆர்வமாக இருந்தாள் என்பது ஆச்சரியம். அன்று நான் முடிவுக்கு வந்தேன். தீர்க்கமாக யோசித்து எடுத்த முடிவுதான் அது. இந்த முடிவை வினோவிடம் கூறவும் இல்லை. என் நாட்குறிப்பில் இப்படி எழுதினேன்...                                                     

விலகி கொள்வது என்பது
எப்போதும்
வெறுத்து ஒதுங்குவதாக
இருப்பதில்லை ..!

ஏதோதோ காரணம் கூறி, வினோவோடு என் நட்பை குறைத்துக் கொண்டே வர தீர்மானித்தேன். ஒரு பேரிடியை, தலையில் வாங்கி எந்த சேதாரமும் இன்றி மீண்டு வந்த உணர்வை இரண்டு மூன்று நாட்கள் கழித்து உணர்ந்தேன். கீதாவின் துரோகத்தில் குற்ற உணர்வற்று நான் குணமடைய முழுக்க முழுக்க வினோவே காரணம். என்மீது அவள் கொண்டிருந்த எதிர்பார்ப்பற்ற அன்பும், சலனமற்ற நம்பிக்கையுமே என்னை மீண்டும் மீண்டும் எழுந்து நிற்க வைத்திருக்கிறது. இப்படி ஒரு இக்கட்டான நிலையில் கூட, எந்த சூழலிலும் என் வாழ்க்கை கெட்டுப் போய்விடக்கூடாது, நான் களங்கப்பட்டுவிடக்கூடாது என்று அக்கறையோடு என்மீது அன்பு செலுத்திய வினோ, இப்போது என் மனதில் இமயமாய் எழுந்து நிற்கிறாள். முன்னை விட ஆயிரம் மடங்கு வினோவை நேசிக்கிறேன்.  இது காதலை கடந்தது, இந்த அன்பு உடலை விரும்பாதது.  ஆத்மார்த்தமான  நம்பிக்கை, எதிர்பார்ப்பற்ற அன்பு, சலனமற்ற நட்பு இதுதான் வினோ குறித்து என் மனதில் வரையப்பட்டிருக்கும் ஓவியம். இதை எப்போதும் அழித்துவிட முடியாது.  எங்கள் உறவின் அடிப்படை அன்பு மட்டும் தான்... நம்பிக்கை மட்டும் தான்... நட்பு மட்டும் அதை தாண்டி எதையும் எங்களால் யோசித்துக் கூட பார்க்க இயலாது...  மிக சாதரணமாக துவங்கிய நட்பு, இவ்வளவு தீவிரமாக, ஆத்மார்த்தமாக, அன்னியோன்மாக நெருக்கி சொல்லவேண்டுமானால் பரிசுத்தமாக பயணிக்கிறது. நினைக்கும் போதெல்லாம் என் மனதில் இனம் புரியாத பூரிப்பு பூத்துக் குலுங்குகிறது.     நான்கு நாட்கள் கழித்து வினோவிடம் இருந்து குறுஞ்செய்தி இப்படி வந்தது ...

ஆளுயர நான் வளர்ந்து நின்றாலும்
அடிசறுக்கி வீழ்ந்து தொலைந்தாலும்
அது உன் அன்பினால் மட்டுமே
     
இதுதான் எனக்கும் வினோவுக்குமான தொடர்பு.   வினோவின் நினைவுகளில் இருந்து மீண்ட கணேஷ், ப்ரியாவின் நினைவுகள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன...

எனக்கும் பிரியாவுக்கும் திருமணம் நடப்பதற்கு ஓராண்டிற்கு முன்பு நடந்த நிகழ்வொன்று மனதில் மீண்டும் உயிர்பெறுகிறது. அன்றைக்கு ரகுவை பற்றி ப்ரியா சொன்னபோது நான் எப்படி நடந்து கொண்டேன்? நினைவுக்கூட்டில் இருந்து குதித்தோடி முன் நிற்கிறது அந்த நாள். அன்று நான் ப்ரியாவிடம் நடந்துகொண்டது அநாகரித்தின் உச்சமாக இருக்ககூடும். வினோவின் நட்பை, அந்த நட்பின் சுவடுகளை நான் தடவி பார்ப்பது போன்ற எந்த வாய்ப்பையும் நான் ப்ரியாவுக்கு கொடுக்கவில்லை. பெரும்பாலும் இந்திய சமூக சூழலில் திருமணத்திற்கு பின் பெண்களின் மலரும் நினைவுகள் மௌனங்களால் இட்டு நிரப்பபடுவதாகவே இருக்கின்றன என்பதை முதல்முறையாய் உணர்ந்தேன். திருமணத்திற்கு முன், நான் யாராலும் காதலிக்கப்படவில்லை என்று சொல்லவைக்க இந்த சமூகம் செய்யும் பெரும் பிரயத்தனங்களை முதல்முறையாக வெறுக்கிறேன். யாரும் நேசிக்கப்படாத ஒருத்தியை மணந்து கொள்ளவே எல்லா ஆண்களும் விரும்புகிறார்கள் என்கிற ஆணாதிக்கம் கண்ணெதிரில் தெரிகிறது.

ரகு, ப்ரியாவோடு பணிபுரிந்தவன். ஒரே இடத்தில் பணி புரிந்ததால் இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டதில் எந்த விசித்திரமும் இல்லை. ப்ரியாவை காதலிக்க விரும்பிய ரகுவும் ஆகப்பெரிய குற்றவாளி அல்ல. அந்த நட்பு, விபரீதத்தை நோக்கி நகர்வதை கண்டு ப்ரியா விலகி, அவனுடனான எல்லா தொடர்புகளையும் அறுத்துக் கொண்டு ஓடிவந்ததும் மெச்சத்தக்க ஒன்றுதான். அதை தன்னிடம் மறைத்ததற்காக, ப்ரியாவிற்கு நான் கொடுத்த தண்டனையும், வசவுகளும், அநாகரிகத்தின் உச்சமா? பொறாமையின் எச்சமா? இந்த சமூகம் கற்றுக் கொடுத்த ஆணாதிக்கத்தின்  சொச்சமா? என்பதையெல்லாம் அன்று அறிந்தான்  இல்லை... அன்று ப்ரியாவின் கண்களில் வழிந்தோடிய நதி, ஒருநாள் என்னையும் நனைக்ககூடும் என்பதையும் அவதானிக்கவில்லை. அன்றைக்கு ப்ரியாவின் கண்களில் வழிந்தோடுய கண்ணீரில், பரிசுத்தமான அவளின் அன்பை கண்டெடுக்கும் ஆர்வமில்லாமல் ஆணாதிக்க திமிரில் நின்றுகொண்டிருந்தேன். அவுளுடனான உறவுகளை அறுத்துக் கொள்வதே சாலச் சிறந்ததென்று எண்ணியிருந்தேன். தொடர்ந்து பயணித்தால் சந்தேகப் பேய் சாகடிக்குமே என்று அஞ்சினேன். உருண்டோடிய நாட்களில், பிரிந்தோடிய நினைவுகளை, எங்கிருந்தோ பறந்துவந்த ஆலமரத்தின் பழுத்த சருகொன்று இணைத்து வைத்தது. ஆசீர்வதித்து வழிகாட்டியது. இன்றைக்கு வாழ்க்கை வண்ண வண்ண பட்டாம்பூச்சிகள் பறக்கும் பூந்தோட்டமாய் மாறி நிற்கிறது...

வினோ பற்றி ப்ரியாவுக்கு தெரிந்தால், நான் அவளுக்கு கொடுத்த தண்டனைகளை, அவளும் எனக்கு கொடுக்ககூடும். அப்படி ஒன்று நடந்துவிடக்கூடாது. ப்ரியாவிடம் மானசீக மன்னிப்பை கேட்க நான் தயார். அவள் என்னை மன்னித்துவிடுவாள். நிச்சயமாக என்னைபோல மோசமானவள் அல்ல என் ப்ரியா. அவளுக்கு மனிதர்களை மதிக்க தெரியும். அவர்களின் உணர்வுகளை நேசிக்க தெரிந்தவள். ஆனால் நான்??? எனக்கேன் என்மீது கோபம் வரவில்லை? நான் இவ்வளவு பெரிய சுலநலவாதியாக இருப்பேன் என்று எனக்கேன் முன்கூட்டியே தெரியாமல் போனது?? என்று புலம்பி கொண்டிருக்கையில் ஷவரில் இருந்து வழிந்துவந்த தண்ணீர்கள் நின்று போயிருந்தன. டேங்கில் தண்ணீர் காலியாகி இருக்கலாம்.

நிகழ்காலத்திற்கு திரும்பிய கணேஷ்... ஈரத் தலையோடு வெளியேறி வருகிறான். நேர் எதிரில் இருந்த டைனிங் டேபிளில் அவள் குடித்த காபி கோப்பை பிடித்திருந்த ஒரு வெள்ளைக் காகிதம் சுதந்திரத்திற்காக போராடிக் கொண்டிருக்கிறது. அதனருகில் சென்று கையில் தொட்டு எடுத்து படிக்கிறான்....

கணேஷ்...!
நான் உன்னை நோகடித்திருந்தால்
என்னை மன்னித்து விடு ...

மன்னித்துவிட்டால்
நேராக வந்து என்னை முத்தமிடு ..!

என்னை மன்னிக்க வேண்டியவள், என்னிடம் மன்னிப்பு கேட்கிறாள். இதற்கு பெயர் என்னவென்று தெரியவில்லை. அங்கிருந்து நேராக படுக்கைக்கு செல்கிறான். புத்தம் புதிய சம்மங்கி பூ, வாடிக் கிடப்பதை போல கிடக்கிறாள். அவள் காலருகில் அமரவேண்டுமாய் தோன்றுகிறது. அமர்ந்து கொண்டான். இவன் தலையில் இருந்து வழிந்த நீரோடு, அவனை பரிசுத்தமாக்கி இருந்த கண்ணீர்த் துளிகளும், அவள் பூப்பாதத்தில் பட்டு, நினைவு திரும்பி இவனை பார்க்கிறாள். இருவருக்குள்ளும் வார்த்தைகள் இல்லை... நீண்ட மௌனம். எல்லா மவுனங்களும் நம்மை ஆத்திரமூட்டுவதில்லை  என்கிற உண்மை அப்போது தான் இவனுக்கு புரிகிறது. அந்த மௌனத்தின் முதல் எழுத்தை, அன்பெனும் உளியால் உடைத்து.. அவளை பூப்பாதங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டே கேட்கிறான்...
என்னை மன்னிப்பாயா?...
எதற்கென்ற அவளின் கண் பார்வைக்கு... எல்லாவற்றிற்கும் என்று பதில் சொல்கிறான்...

மரணத்தால் கூட நம்மை பிரிக்க முடியாது என்று கரம் நீட்டிய அவளின் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டே ஆம்... மரணத்தாலும் கூட என்றுகூறி அணைத்துக் கொள்கிறான்....

-    தமிழன் வேலு